search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்சசன் விமர்சனம்"

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராட்சசன் படத்தின் விமர்சனம். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul
    உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு முயற்சி செய்து வருகிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு விஷால், தனது கதைக்காக பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார். பின்னர் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறி வருகிறார். ஆனால் இவரது முயற்சி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணுவின் மாமாவான ராமதாஸ், விஷ்ணு விஷாலை போலீஸ் வேலையில் சேர சொல்லி வற்புறுத்துகிறார். ராமதாஸின் உதவியுடன் போலீஸ் அதிகாரியாகும் விஷ்ணு விஷால் பதவியேற்ற 2 நாளில், பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார்.



    இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் அந்த கொலையில் இருக்கும் மர்மங்களை களைந்து பல தடங்களை சேகரிக்கிறார். இதற்கிடையே பள்ளி ஆசிரியையான அமலா பாலுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அமலா பால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறாள்.

    ஒருவழியாக சை்ககோ கொலையாளியை நெருங்கும் விஷ்ணு விஷாலால், அந்த கொலைகாரனை பிடிக்க முடியவில்லை. மேலும் பணியில் இருந்தும் விஷ்ணு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.



    கடைசியில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூர கொலைகளை செய்யும் ராட்சசனை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? தனது அக்கா மகளை மீட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை விஷ்ணு விஷாலே ஆக்கிரமித்திருக்கிறார். படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அமலாபாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்ந்து செல்கிறார்.



    காமெடி தோற்றத்தில் நடித்து வந்த ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து செல்கிறார். காளி வெங்கட் ஆங்காங்கு வந்து செல்கிறார். ஒரு சில இடங்களிலேயே அவருக்கு சொல்லும்படியான காட்சிகள் இருக்கிறது. ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூசேன் ஜார்ஜ் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

    முண்டாசுப்பட்டி என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படைப்பில் முழு த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும் என்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் காட்சி நீள்வது, ஒருவித சோர்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.



    படத்தில் சைக்கோ கொலையாளி பற்றி எந்த இடத்திலும் கொடூரமான முகத்தையோ, தோற்றத்தையோ காட்டவில்லை. ஆனால், படம் பார்ப்பவர்களை படம் முழுக்க அச்சுறுத்தியிருக்கிறார் ஜிப்ரான். பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார். வில்லன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ராட்சசன்' ஆர்வத்தை தூண்டுகிறான். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul

    ×